டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் தனது ஆதிக்கத்தை இந்தியா மீண்டும் நிலைநாட்டியுள்ளது. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி ஒரு இருதரப்பு டி20 தொடரைக்கூட இழந்ததில்லை என்ற வரலாற்று சாதனை தொடர்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.
கடந்த சில போட்டிகளாக தடுமாறிய சஞ்சு சாம்சன் முதல் சில பந்துகளில் பொறமை காத்து பின்னர் அதிரடியை காட்டினார். சிக்சர், பவுண்டரிகளை பொளந்த அவர் 20 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். இதில், 4 சிக்சர், 2 பவுண்டரிகள் அடங்கும். சாம்சன் 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும்.



